Monday, January 18, 2010

தமிழ் இனவழிப்பும் பாலியல் வல்லுறவுகளும்

Posted by soundarasolan On 11:37 PM 0 comments

                  உலகத்தமிழர்களின் நிலைத்த உறுதியான போராட்டத்தின் விளைவாக இப்போதுதான் நாகரீகத்தேசங்கள் என கூறிக்கொள்பவை, ஈழத்தொடர்பான  தனது பிழையான புரிதல்களை மறுபரிசீலினைக்கு உட்படுத்த தொடங்கியிருக்கின்றன.பயங்கரவாத ஒடுக்கம் ,உள்நாட்டு சர்ச்சை  என்ற பொருளிலே ஈழ சிக்கலை அணுகிய அவை, சிங்கள அரச பயங்கரவாத்திற்கு முண்டுகொடுத்து இனவழிப்பிற்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோய் ஈழ பேரவலம் இனவழிப்பு தான் என இப்போது அம்பலப்படும்போது கையை பிசைந்துக்கொண்டு இருக்கின்றன
.அவை ஈழ பேரவலத்தை போரியல் அறமீறல் ,மனித உரிமை மீறல் போன்ற மிக இலகுவான சொற்பதங்களை கொண்டு வர்ணித்து அதற்கான  பரிகாரத்தைப்பற்றி தான் பேசுகின்றனவே ஒழிய , பூசிமொழுக முடியாத ,புரையோடிப்போன இனவழிப்பு பற்றி வாய் திறக்கவே மறுக்கின்றன.  இனவழிப்பை உறுதிசெய்யும் பட்சத்தில் இனவழிப்புக்கிசைவான  தமது பழைய செயல்பாடுகள் அம்பலப்படும்,  ஐ.நா. இனவழிப்பு தீர்மானத்தின்படி ஈழ இனவழிப்பை தடுத்து நிறுத்தவோ அல்லது தண்டிக்கவோ வேண்டிய கடப்பாட்டிற்கேற்ப  செயல்பட வேண்டிவரும்,அத்தகைய செயல்பாடுகள் தமது சுய ஆதாயத்திற்கு எதிராக அமையும் என்ற ஐயம்  போன்றவைதான் அத்தேசங்களை தடுக்கின்றன.எவ்வாறு சிங்களவன் உலக வல்லாதிக்கங்களை கடிவாளமிட்டு கொண்டு வந்து பயங்கரவாத ஒடுக்கம் என்ற புள்ளியில் நின்று அவற்றை  தமிழனுக்கு எதிராக ஏவிவிட்டானோ   அவ்வாறே தமிழனும் இனவழிப்பை அம்பலப்படுத்தி ஐ.நா. இனவழிப்பு தீர்மானத்தின்படி அத்தனை உலக வல்லாத்திகங்களையும் செயலாற்ற நிர்பந்தப்படுத்தி நமக்கான சாதகமான தெரிவுகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.
    GENOCIDE என்ற சொல்லாடலை உருவாக்கியவரும்   இனவழிப்பு  ஆராய்ச்சியாளர்களின் முன்னோடியுமான ரபேல் லெம்கின்( RAPHAEL LEMKIN) இனவழிப்பு பற்றிகூறும்போது
             இனவழிப்பு என்பதாவது ஒரு தேசத்தை உடனடியாக அழித்தொழிப்பது மட்டுமல்ல நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம்  ஒரு தேசத்தாரின்  அடிப்படை வாழ்வாதாரக்கட்டுமானங்களை சிதைத்து அதன் மூலம் அத்தேசத்தையும் அழிக்கும்  நோக்கோடு மேற்கொள்ளப்படும் பெருந்திரள்  கொலைகள் ,பெருந்திரள் பாலியல் வல்லுறவுகள்,அரசியல்,பொருளாதார,கலாச்சார,மொழி,மத அழித்தொழிப்புகள் போன்றவையாகும்.
             ஈழத்தில் நடந்த,நடந்துக்கொண்டிருக்கும்  பாலியல் வல்லுறவுகள்  எவ்வாறு இனவழிப்பாகும் என்பதைமட்டும் பற்றி இப்போது பார்ப்போம்.
          ஒரு சாராரின் செயலே
                    ஆக்கிரமிப்பாளன் சிங்களவனும் அவனை சார்ந்த தமிழ் ஒட்டுண்ணி குழுக்களுமே தான் ஈழத்தில் நடந்த,நடக்கின்ற அத்தனை பாலியல் வன்முறைகளுக்கும் காரணம்.எதிரணியில் நிற்கும் புலிகள்மீது இதுவரை யாதொரு குற்றசாட்டுக்கூட பதியப்படவில்லை.பாலியல் வன்முறைகளை போரின் ஒரு கூறாக,பக்கவிளைவாக அங்கீகரிக்கும் போரியல்,சமூகவியல் வல்லுனர்கள் புலிகளின் இத்தகைய போரியல் அறத்தை கண்டு திகைப்படைகிறார்கள் .சிங்களவனின் நீடித்த ,தொடரும் பாலியல் வல்லுறவுகளே ,ஈழத்தில் நடப்பது உள்நாட்டு சர்ச்சையன்று அதையும் தாண்டி அங்கு இனவழிப்பு நிகழ்கிறது என்பதை உறுதிசெய்கிறது.களமாடுவர்(COMBATANTS) ,களமாடார்(NON-COMBATANTS) என்ற பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கபடுகிறார்கள்.பெரும்பாலும் களமாடா அப்பாவி தமிழ்மக்கள் மட்டுமே இந்த படுபாதக செயலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
          குற்றவாளியின் அடையாளம்
                   மற்ற போர்க்கால வல்லுறவுகளில்  குற்றவாளியின் அடையாளத்தை உறுதிசெய்வது கடினம்.ஆனால் இனவழிப்பு வல்லுறவுகளில் குற்றவாளியின் அடையாளம் கல்மேல் எழுத்தாக தெரியும்.உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட 25  ஆண்டுகாலமாக தொடர்ந்து அமலில் இருக்கும் தண்டனைவிலக்கை (IMPUNITY)நீக்க மறுக்கும் சிங்கள அரசின்போக்கும் எந்த ஒரு குற்றவாளியும் இதுவரை தண்டிக்கபடாத அடாத செயலும் குற்றவாளியின் அடையாளத்தை நன்கு வெளிப்படுத்துகிறது.
              நெறிப்படுத்தப்பட்டவல்லுறவுகள் 
                          மற்ற போர்க்கால வல்லுறவுபோல் ஈழத்தில் நடக்கும் இந்த இழிசெயல் வெற்றிக்கான பரிசாகவோ வீரர்களின் உளவியலை மேம்படுத்தும் செய்கையாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.ஈழத்தில் நடந்தது ஒரு விபத்தோ,பாலியல் இச்சை தொடர்பானதோ இல்லை.ஒழுக்கக்கேடான ஆயுததாரிகளின் கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டி செயலாகவோ எடுத்துக்கொள்ளமுடியாது.அவை சிங்கள அரசால் நன்கு திட்டமிடப்பட்டு ,நெறிப்படுத்தப்பட்டு தமிழின அடிப்படை கட்டுமானங்களை அழிக்கும்பொருட்டு பயன்படுத்தப்படும்  கொடிய போரியல் ஆயுதமேயாகும்.இந்த கொடிய பாலியல் ஆயுதங்கள் தனி நபரைமட்டும் அழிப்பதில்லை.மொத்த சமுதாயத்தையும் அழித்தொழிக்கின்றன.
         ஐ.நா. தீர்மானத்தின்படியும்  ஈழத்தில் நடப்பதை இனவழிப்புதான்என்று நிலைநிறுத்த முடியும்.
       (ARTICLE 2) இன்படி  இனவழிப்பு என்பதாவது ஒரு தேசிய,இன,மரபின ,மத குழுக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் கீழ் கண்ட செயல்களாகும்.
  •         குழு உறுப்பினர்களை கொல்வது 
  •           குழு உறுப்பினர்களுக்கு உடலிய,உளவியல்ரீதியாக தீங்கிழைப்பது 
  •          குழுவின் அடிப்படை வாழ்வாதார கட்டுமானங்களை தாக்கி அதன்மூலம்  அக்குழுவை முழுமையாகவோ பகுதியாகவோ அழித்தல் 
  •           குழுவில்  குழந்தை பிறப்புகளை தடுக்கும் நடவடிக்கைகள் 
  •           வலுக்கட்டாயமாக குழந்தைகளை ஒரு குழுவிலிருந்து வேறொரு குழுவுக்கு மாற்றுதல்
           இனி, ஐ.நா. தீர்மானத்திற்கினங்க ஈழத்தில் நடக்கும் வல்லுறவுகள் எவ்வாறு இனவழிப்புக்கு இட்டு செல்கின்றன என்று பார்ப்போம்.
       குழு உறுப்பினர்களை கொல்வது
              ஈழத்தில் வெளிக்கொணரப்பட்ட வல்லுறவுகள் பெரும்பாலானவை  கொலையில்தான் முடிந்து இருக்கின்றன.அல்லது கொல்லப்பட்ட அனைத்து தமிழச்சிகளும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி ஆயிரத்தில் ஒன்று தான் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.போர் மற்றும் சமாதான காலத்தில் நடைபெற்ற  பெருந்திரள் வல்லுறவுகளும் அதன் தொடர்ச்சியான பெருந்திரள்  கொலைகளும் பல்லாயிரத்தைத்தாண்டும்.
              குழு உறுப்பினர்களுக்கு உடலிய,உளவியல் ரீதியாக தீங்கிழைப்பது
           பெண்களின்கற்புநிலையை கலாச்சார குறியீடாக சமுதாயத்தின் உச்சபச்ச நாகரீகசின்னமாக கற்பிக்கப்பட்டு வார்த்தெடுக்கப்பட்ட தமிழ்  இனவமைப்பில் பாலியல் வல்லுறவைக்காட்டிலும் மேலதிக உடலிய உலவிய சித்திரவதை இருக்கமுடியாது.
            குழுவின் அடிப்படை வாழ்வாதார கட்டுமானங்களை தாக்கி அதன்மூலம் அக்குழுவையே அழித்தல்
         தமிழினத்தில் பெண்ணே குடும்ப,சமுதாய ,இன பிணைப்பு பாலமாக இருக்கிறாள்.அத்தகையவளை வல்லுறவுக்கு உட்படுத்தி சமுதாயத்திலிருந்து துரத்தும்போது அவளின் குடும்பமும் மட்டுமின்றி சமுதாயமும் இனமும் அழிந்துபோகிறது.இனவழிப்புக்காலத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக  தாக்குவது என்பது அவள்  சார்ந்த இனத்தை மொத்தமாக தாக்குவதற்கு ஒப்பாகும்.
          இனவழிப்பு வல்லுறவுகளால் பெண்கள் மட்டும் பாத்திக்கபடுவதில்லை அவளை சார்ந்த ஆண்களுக்கும் அது பெரிய இழிவாக அமைகிறது.சுயமரியாதை அழிகிறது.இனத்தின் பாற்பட்ட தனித்துவ பெருமைகள் கரைகிறது .சுயத்தை இழந்த அடிமைத்துவ மனித கூட்ட நிலைக்கு இட்டு செல்கிறது.இன கலாச்சாரவிழுமியங்கள் நீர்த்துபோகின்றன.அச்சமுடைய சுய இரக்கமுடைய அவமானகரமான இனத்தை உருவாக்கிறது.
          குழுக்களில் குழந்தை பிறப்புகளை தடுக்கும் செயல்கள்
            கூட்டு வல்லுறவுக்கு (GANG RAPE) பெருந்திரள் வல்லுறவுக்கு(MASS RAPE) உட்படுத்தப்படும் பெண்கள் தமது பெண்மையை  இழப்பதோடு தாய்மைக்கான உடலிய உறுப்புகளும் சிதைக்கப்பட்டு நிற்கிறார்கள்.உடலிய.உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு பெண், குழந்தை பேற்றை தவிர்ப்பாளானால் இனவழிப்பு வல்லுனர்கள் கூற்றுப்படி கண்டிப்பாக அது இனவழிப்பாகும்.
              வலுக்கட்டாயமாக குழந்தைகளை ஒரு குழுவிலிருந்து வேறொரு குழுவிற்கு மாற்றுதல் 
               சட்டப்படி தந்தையின் மரபினத்தையே குழந்தையும் சேரும் என்ற சமுக அமைப்பில் சிங்களன் வல்லுறவுக்கு பின் பிறந்த  குழந்தை தமிழினத்தை சேருமோ?

          இனவழிப்பு மெய்பிக்கும் நடவடிக்கைகளில் குற்றவாளியின் நோக்கத்தையும் குற்றம் நிகழும் சூழலையும் சந்தேகத்திற்கிடமின்றி நிறுவுவது அவசியம்.
           குற்றவாளியின் நோக்கம் 
                  இனவழிப்பு குற்றவாளிகள்   நோக்கத்தை நேரடியாக அறிவிப்பதில்லை . அனால் குற்றவாளிகளின்  நிலைத்த தொடர்ந்த நடவடிக்கைகள் ,குற்றசூழல்  போன்றவற்றிளிருந்து குற்றவாளிகளின்  நோக்கத்தை ஊகிக்க அல்லது வருவிக்க முடியும்.
         எடுத்துக்காட்டாக :
       25 ஆண்டுகாலமாக  தண்டனை விலக்கு (IMPUNITY) அமலில் உள்ளது .யாதொரு குற்றவாளியும் தண்டிக்கபடுவதில்லை.சிங்கள அரசு அனைத்தையும்  உள்வாங்கிக்கொண்டு மறைமுகமாக இனவழிப்பை ஊக்குவிக்கிறது.
                சாகும்வரை அல்லது முதிர் கற்பிணியாகும் வரை வல்லுறவுக்கு உட்படுத்துவது ,பெருந்திரள் வல்லுறவுகள்(MASS RAPE),கூட்டு வல்லுறவுகள்(GANG RAPE),குழந்தைகள் முதியோர் என்ற வயது வித்தியாசமின்றி வன்புணர்வது,பொது இடத்தில் வைத்து அல்லது குடும்பத்தார் முன்னிலையில் வன்புணர்வது ,உறவுகொண்டபின் பிறப்புறுப்புகளை வெடிவைத்து தகர்ப்பது,பிணத்தையும் கூட புணர்வது ,சிறைப்படுத்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் வன்புணர்வது போன்ற அடாத படுபாதகங்கள் அனைத்தும்  தமிழின குழுக்கட்டுமானங்களை அழிக்கும் நோக்கங்கொண்டவை என்பதை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்.
              வெற்றியாளனுக்கு தண்டனை கிடையாது  ,நாங்கள் நினைத்தால் எங்களால் அனைவரையும் வல்லுறவுக்கொள்ளமுடியும் என்ற பலித கொஹோன வின் அறிவிப்பும் நலன்புரிமுகாம்களில் கிறேக்கத்தத்துவம் படிக்கலாம் அல்லது  வேறெதுவும் நடக்கலாம் என்ற முகாம்களின் பொறுப்பான அதிகாரியின் எகத்தாளமும் , ஈழத்தில் வல்லுறவுகள் அரசிற்கு தெரிந்தே நடக்கின்றன ,அரசும் அதனை  தடுக்காது மறைமுகமாக ஊக்குவிக்கிறது  என்பதனை விளங்கிக்கொள்ள முடிகிறது.
              இவ்வளவு கொடுமைகள் நடைபெற்றபின்னும் எந்த ஒரு விசாரணை ஆணையமோ புனரமைப்பு ,உண்மை அறியும் ஆணையமோ இதுநாள் வரையில் சிங்கள அரசால் அமைக்கப்படவில்லை.
                  மேற்கண்டவையாவும், அனைவருக்கும் தெரிந்த துயரங்கள் தான்.அது எவ்வாறு இனவழிப்புக்கு இட்டு செல்கின்றன என்பதைத்தான் பார்த்தோம்.நேரடிசாட்சிகளின் விசாரணை ,கள ஆய்வு,வல்லுனர்களின் சட்டபடியான ஆய்வுகள் என்ற நிலைக்கு வரும்போது இன்னும் பல பயங்கரங்கள் வெளிவரும்.  இனவழிப்பை  எவ்வாறு தடுக்கபோகிறோம், எவ்வாறு தண்டிக்கப்போகிறம் ,எவ்வாறு நிலைத்த அமைதியான ஈழத்தை உருவாக்கப்போகிறோம் என்பதுதான் இப்போது நம் முன் நிற்கும் கேள்வி.
     சில இணைப்புகள் :

0 comments: